Sunday, January 24, 2010

நடந்தாய் வாழி காவேரி

எழுதுவது ஒரு வரம். சிலருக்கு இயல்பாய் வருகிறது. சிலருக்கு விஷ்வாமித்தரர் போல் கடும் தவம் செய்து பெற வேண்டிருக்கிறது. எப்படி வாய்த்ததோ, ஆனால் தி.ஜா விற்கு அவ்வரம் அளவின்றி இருக்கிறது. சுவாரசியமான கதையை சொல்வதென்பது வேறு, ஒரு கட்டுரை புத்தகத்தை சுவாரசியமாக சொல்வதென்பது வேறு. அதை சாதித்து காட்டி இருக்கிறார்கள் தி.ஜாவும், கிட்டியும், “நடந்தாய் வாழி காவேரியில்". அதுவும் என் போன்ற கட்டுரை என்றால் பயத்துடனே எடுப்பவனும் மூழ்கி போய் படிக்குமாறு.

காவேரியின் பாதையையும், அதன் கிளை மற்றும் உப நதிகளையும், காவேரியின் பாதையில் உள்ள ஊர்களையும் விவரிப்பதே புத்தகம். காவேரியின் போக்கை விவரிக்கும் போது, கண் முன்னே காவேரி ஓடுகிறது. இதை படிக்கும் பொழுது 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இந்த புத்தகத்தின் தலைவி, பெருகி ஓடிய இடங்களில் எல்லாம் இப்பொழுது வெறும் மணல் மேடாய் இருப்பது, வாழ்ந்து கெட்ட வீட்டை பார்பது போன்ற வலியை ஏற்படுத்துகிறது.

காவேரி கரை ஊர்களை பற்றி சொல்லும் போது, அதன் வரலாற்றையும், அது சார்ந்த நம்பிக்கைகளையும், அந்த ஊரில் வாழ்ந்த மனிதர்களையும், அவர் படைப்புகளையும் சொல்லி செல்லும் பொது, ஒரு வித nostalgia உருவாகிறது. கங்கை கொண்ட சோழபுரம் பற்றிய கேள்விகள், ஒரு நாவலை படிக்கும் போது மனதில் சில கதாபாத்திரங்கள் ஏற்படுத்தும் உணர்வை தருகின்றன.

ஆசிரியரின் தமிழ் இலக்கியகங்கள், மற்றும் கர்ஞாடக இசை மேல் உள்ள ஈடுபாடு, புத்தகம் முழுவதும் விரவி உள்ளது. பயண நூல், தகவல் களஞ்சியம் என்பதை எல்லாம் விட அதிக ஈடுபாடு வர காரணம் ஆசிரியருக்கு காவேரி மீது உள்ள காதல். காதல் இன்றி வேறெதுவும், இப்படி உருகி, இரசித்து எழுத வைக்காது.

எத்தனையோ இராஜ்ஜியங்களையும், மன்னர்களையும், படைப்பாளிகளையும், கோபுரங்களையும், அரண்மனைகளையும், கண்டு, நூற்றாண்டாய் நிலைத்து நின்று, பல துணை நதிகளை இணைத்து, சுளித்து, வளைந்து, பொங்கி, அடங்கி , துள்ளி, பல கிளை நதிகளாய் கிளைந்து, கடல் கலந்த காவேரியியை கொண்டாடும் புத்தகம்.அகண்ட காவேரியில் நமக்கு, இன்று மிச்சம் இருப்பவையோ, பரந்த மணல் திட்டுகளும், சிதிலடைந்த கோயில்களும்தான். அவைகளும் வேகமாய் கரைந்து கொண்டிருக்கும் நேரத்தில், நமக்கும், நமக்கு பின் இருப்பவர்களும் மிச்சம் இருப்பவையோ சிலப்பதிகாரம், தியாகராஜர் கீர்த்தனைகள் போன்ற காவிரியை கொண்டாடிய படைப்புகள் தான். அவை போலவே சாஸ்வீதம் பெரும் தன்மை வாய்ந்தது இப் படைப்பு.

1 comment:

Anonymous said...

I never thought U will use/accept Saa"svee"tham and Vi"sh"vamitrar.
Anyway it good.