Saturday, February 24, 2007

கவிதை

வெண்பா இலக்கணத்தை மீண்டும் படித்தது முதல் எதையாவது ஏழு சீருக்குள் தளை தட்டாமல் எழுதி விடவேண்டும் என முயன்று தோற்று போகின்ற நொடியில் தோன்றிய வரியை கொஞ்சம் மாற்றி அமைத்தால் குறள் வெண்பா இலக்கணத்துக்குள் அமைந்த சொற்றொடர் வந்தது. இதை கவிதை என்று சொல்ல மாட்டேன். எப்படி ஆங்கிலத்தில் house, home இரண்டுக்கும் வேறுபாடு உள்ளதோ அது போல் கவிதைக்கும், கவிதை போலுக்கும் இடையேவும் உண்டு. அந்த வித்தியாசத்தை வார்த்தைகளால் வரையறுக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அது ஒரு 'feel factor'.
கவிதை அனுபவம்/ உணர்வு சார்ந்த ஒன்று. ஆகையால் அனைவருக்கும் ஒரு கவிதை, கவிதையாக தெரிய வேண்டியதில்லை. ஆனால், 'கவிதை போன்ற' ஒன்று யாருக்குமே ஒரு உணர்வை தராது. அது வெறும் தட்டையான சொற்களின் தொடர்ச்சி. மரபு கவிதை என்பது புள்ளி வைத்து கோலம் போடுவது போன்ற ஒரு செயல். மரபு கவிதைக்கு ஆதரவாக பல காரணங்கள் கூறபட்டாலும் (இசைக்குள் சுலபமாக நுழைவது ...) என் பார்வையில் தோன்றும் ஒரு காரணம், அது படைப்பாளிக்கு கூடுதலான நிறைவை தரும் என்பது. ஒரு நெரிசலான சாலையில் லவகமாக பேருந்தை ஓட்டுபவனுக்கும் புறவழிசாலையில் ஒட்டுபவனுக்கும் உள்ள வேறுபாடு போல். நீ சொல்ல நினைத்ததையே, நான் இன்னும் குறைவான சாத்தியங்களுக்குள் சொல்லிவிட்டேன் என்ற ஒரு edge. இது தான் பெரும்பான்மையான தமிழாசிரியர்களை மரபு சார்ந்தே எழுத தூண்டுகிறது என்று நினைக்கிறேன். அதே போல் இலக்கணம் அறிந்த வாசகனுக்கும் ஒரு பிரமிப்பு. "இத்தன fielder நிக்க வெச்சும் 4 அடிச்சிட்டான்யா!!" என்பது போன்று. இந்த பிரமிப்புக்கு ஈடு செய்வதற்காகத்தான் மரபு சாரா கவிதை எழுதுவோர் ஒரு புன்முறுவலையோ, இமை உயர்தலையோ தரக்கூடிய புத்திசாலிதனமான வரிகளை தங்கள் கவிதையில் வைத்துவிடுகிறார்கள். பரவலான மக்களால் ஏற்று கொள்ள பட வேண்டிய மரபு சாரா கவிதைக்கு இந்த 'புத்திசாலித்தனமான வரியே' ஒரு இலக்கணம் ஆகி விட்டது.

நான் எழுதிய அந்த 'குறள் வெண்பா' சொற்றொடர்:

தளை:
"எப்படிச் சொன்னாலும் எங்கேனும் தட்டு
வதுதட்ட வில்லை இதில்"

Monday, February 19, 2007

திருக்குறள்-3

"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்"
அர்த்தம் புரிந்து கொள்வதற்கு மிக எளிமையான குறள். எங்கள் ஊர் பேருந்துகளில் அதிகம் பயன்படுத்த பட்ட குறள். ஆனால் என்னுள் இந்த குறள் அதிகம் தாக்கம் ஏற்படுத்தியது வேலைக்கு சேர்ந்த பின்தான். வார்த்தைக்கும் வாழ்க்கைகும் இடையே பள்ளம் விழும் இடங்களில் எல்லாம் மனதுள் ஒலிக்கும் குறள். திருக்குறள் பகுப்பு முறையும், அது ஒருவரால் படைக்க பட்டது என்பதும் பலரால் நிறுவ படுகிறது. இருந்தாலும்,
அது தொட்டுச் செல்கின்ற கருத்துக்களை காணும் போது அது ஒருவரால் ஒரே சமயதில் படைக்க பட்டிருக்க முடியுமா என்ற சந்தேகமே/ மலைப்பே எழுகிறது. துறவறத்தையும், காமத்துப்பாலையும் ஒரே stretchil எழுத முடியுமா? அப்படி இல்லை என்றாலும் முதல் குறள் படைத்த காலத்திலேயே இவ்வளவு பெரிய படைப்பு பற்றிய எண்ணம் இருந்திருக்குமா? ஆனால், என்னிடம் ஒரு முடிவை எடுத்துக்கொள்வதற்கு தேவையான அளவு ஆதாரங்கள் இல்லை. இன்றைய நிலையில் நான் திருக்குறள் ஆதிமூலம் பொருத்தவரை ஒரு agnostic.
இந்த குறள் வினைதிட்பம் கீழ் வருகிறது. ஆனால் எனக்கு இது 'ஒரு தனி மனிதனின் எண்ணங்களுக்கும் சமூக எதிர்பார்ப்புகளுக்கும் இடையே வேறுபாடுகள் தோன்றுகிற இடத்துக்கும் பொருத்தமான' குறளாகவும் தோன்றுகிறது. theory of relativity எப்படி இயற்பியல் தாண்டியும் பொருந்துமோ, அதுபோல இது செயலை தாண்டியும் அர்த்தபடுகிறது.

Sunday, February 11, 2007

திருக்குறள்-2

"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்."

குறள் படித்த அனைவரும் கட்டாயம் கேள்வி பட்டிருக்க கூடிய குறள். நீண்ட காலத்திற்கு இக்குறள், கல்வியின் பயன் கடவுளை வணங்குவது எனும் பொருள் தருவதாகவே மட்டுமே தோன்றியது. பின் வாலறிவன் என்ற சொல் சமண சொல் என்ற வாதம் கேள்வி பட்டேன். கல்வியின் பயன் அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்றல் எனும் 'நாத்திக' கருத்து அறிமுகமானது. இதன் தொடர்ச்சியாய், வாலறிவன் = அனைத்தும் அறிந்தவன் எனும் அர்த்தம் வருமோ எனத் தோன்றியது. அப்படி சாத்தியப்பட்டால் , அனைத்தும் அறிந்தவர் பாதம் தொழாவிட்டால் கல்வியின் பயன் இல்லை என அர்த்தபடுகிறது. அனைத்தும் அறிந்தவர்(ன்) இருக்க முடியுமா ?( கடவுள்??). அல்லது ஒட்டுமொத்த அறிவுக்கு கொடுக்கபட்ட உருவம்தான் வாலறிவனோ?. பாதம் பனிதல் என்றால் அடக்குத்துடன் இருத்தல் எனக் கொள்ளலாம். அப்படி என்றால், "அறிவுலகின் முன் பணிவுடன் இருத்தல், அதாவது கற்றது கைமண் அளவு என்பதே கல்வியின் பயன்."

Saturday, February 10, 2007

திருக்குறள்-1

என் பள்ளி காலங்களில் நான் திருக்குறளை கவிதை என்ற வட்டதிற்குள் வைத்ததே இல்லை. எல்லோரும் குறளை புகழ்வதை படிக்கும் / கேட்கும் (என் அப்பாவும் மற்றொரு மாமாவும்) போதெல்லம் எனக்கு, “இதில் என்ன இலக்கண வரையறைக்குள் எகப்பட்ட கருத்துகள் உள்ளன , ஆனால் கவிதை?....” என்ற எண்ணமே தோன்றும். வைரமுத்தும், மேத்தாவும் எழுதிய "கவிதைகளில்" சொக்கி கிடந்த காலம்.

காலம் மாற உணவு ரசனைகள் மட்டும் அல்ல கவிதை சார்ந்த ரசனைகளும் மாறின. இந்த மாற்றதிற்கு காரணம் சில வாழ்வியல் அனுபவங்கள், அந்த நொடியில் மனதில் மின்னிய குறள்கள். மற்றொன்று, நம்ம ஊர் அரசு பேருந்துகள். என்னோட எண்ண படி 20 குறளுக்குள் ஒன்றைதான் எல்லா அரசு பேருந்திலும் எழுதி இருக்கிறார்கள். சினிமா பாடல்கள் கூட ஒலிக்காத அந்த பேருந்து பயணங்களில் நம்மையும் அறியாமல் நம் உள்ளே போய் தங்கிவிடும் அந்த குறள்கள் ஒரு புதிய பரிமானத்தை காட்டும்.

நான் பதிவு செய்ய விரும்புவது திருக்குறளுக்கு அர்த்தம் அல்ல. மு.வா தொடங்கி வைத்ததை பல பேர் தொடர்ந்து விட்டார்கள். சான்டியல்யன், சுஜாதா கூட உரை எழுதி உள்ளனர். நான் குறளையோ, எந்த உரையையோ முழுதாக படிதவன் இல்லை. ஆனால் நான் புரட்டிய வரையில் பெரும்பாலும் குறளுக்கு உரை எழுதிய நொடியில் மட்டும் எல்லாரும் மு.வா ஆக இருந்திருக்கிறார்கள். சுஜாதாவின் கதைகளில்/கட்டுரையில் இருக்கும் எள்ளல் கலந்த நடையையோ, கலைஞரின் வார்த்தை விளையாட்டையோ எதிர்பார்த்தால் மிஞ்சுவது எமாற்றமே! ஒரு வேளை இவர்கள் எதோ குறிப்பிட்ட குறள்களுக்கு மட்டும் (சாண்டில்யன் காமத்து பாலுக்கு) உரை எழுதி இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ..

நான் பதிவு செய்ய போவது என்னை ஈர்த்த குறள்களை பற்றிய என் உளறல்களை தான்.

Tuesday, February 6, 2007

Hopefully, next round

After a hiatus, i hope i'll start again to scribble. However there are some issues like, the utility to type in tamil is not getting installed in vista. so may be no tamil blabbering still there is an alternative.