என் பள்ளி காலங்களில் நான் திருக்குறளை கவிதை என்ற வட்டதிற்குள் வைத்ததே இல்லை. எல்லோரும் குறளை புகழ்வதை படிக்கும் / கேட்கும் (என் அப்பாவும் மற்றொரு மாமாவும்) போதெல்லம் எனக்கு, “இதில் என்ன இலக்கண வரையறைக்குள் எகப்பட்ட கருத்துகள் உள்ளன , ஆனால் கவிதை?....” என்ற எண்ணமே தோன்றும். வைரமுத்தும், மேத்தாவும் எழுதிய "கவிதைகளில்" சொக்கி கிடந்த காலம்.
காலம் மாற உணவு ரசனைகள் மட்டும் அல்ல கவிதை சார்ந்த ரசனைகளும் மாறின. இந்த மாற்றதிற்கு காரணம் சில வாழ்வியல் அனுபவங்கள், அந்த நொடியில் மனதில் மின்னிய குறள்கள். மற்றொன்று, நம்ம ஊர் அரசு பேருந்துகள். என்னோட எண்ண படி 20 குறளுக்குள் ஒன்றைதான் எல்லா அரசு பேருந்திலும் எழுதி இருக்கிறார்கள். சினிமா பாடல்கள் கூட ஒலிக்காத அந்த பேருந்து பயணங்களில் நம்மையும் அறியாமல் நம் உள்ளே போய் தங்கிவிடும் அந்த குறள்கள் ஒரு புதிய பரிமானத்தை காட்டும்.
நான் பதிவு செய்ய விரும்புவது திருக்குறளுக்கு அர்த்தம் அல்ல. மு.வா தொடங்கி வைத்ததை பல பேர் தொடர்ந்து விட்டார்கள். சான்டியல்யன், சுஜாதா கூட உரை எழுதி உள்ளனர். நான் குறளையோ, எந்த உரையையோ முழுதாக படிதவன் இல்லை. ஆனால் நான் புரட்டிய வரையில் பெரும்பாலும் குறளுக்கு உரை எழுதிய நொடியில் மட்டும் எல்லாரும் மு.வா ஆக இருந்திருக்கிறார்கள். சுஜாதாவின் கதைகளில்/கட்டுரையில் இருக்கும் எள்ளல் கலந்த நடையையோ, கலைஞரின் வார்த்தை விளையாட்டையோ எதிர்பார்த்தால் மிஞ்சுவது எமாற்றமே! ஒரு வேளை இவர்கள் எதோ குறிப்பிட்ட குறள்களுக்கு மட்டும் (சாண்டில்யன் காமத்து பாலுக்கு) உரை எழுதி இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ..
நான் பதிவு செய்ய போவது என்னை ஈர்த்த குறள்களை பற்றிய என் உளறல்களை தான்.
No comments:
Post a Comment