Saturday, February 24, 2007

கவிதை

வெண்பா இலக்கணத்தை மீண்டும் படித்தது முதல் எதையாவது ஏழு சீருக்குள் தளை தட்டாமல் எழுதி விடவேண்டும் என முயன்று தோற்று போகின்ற நொடியில் தோன்றிய வரியை கொஞ்சம் மாற்றி அமைத்தால் குறள் வெண்பா இலக்கணத்துக்குள் அமைந்த சொற்றொடர் வந்தது. இதை கவிதை என்று சொல்ல மாட்டேன். எப்படி ஆங்கிலத்தில் house, home இரண்டுக்கும் வேறுபாடு உள்ளதோ அது போல் கவிதைக்கும், கவிதை போலுக்கும் இடையேவும் உண்டு. அந்த வித்தியாசத்தை வார்த்தைகளால் வரையறுக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அது ஒரு 'feel factor'.
கவிதை அனுபவம்/ உணர்வு சார்ந்த ஒன்று. ஆகையால் அனைவருக்கும் ஒரு கவிதை, கவிதையாக தெரிய வேண்டியதில்லை. ஆனால், 'கவிதை போன்ற' ஒன்று யாருக்குமே ஒரு உணர்வை தராது. அது வெறும் தட்டையான சொற்களின் தொடர்ச்சி. மரபு கவிதை என்பது புள்ளி வைத்து கோலம் போடுவது போன்ற ஒரு செயல். மரபு கவிதைக்கு ஆதரவாக பல காரணங்கள் கூறபட்டாலும் (இசைக்குள் சுலபமாக நுழைவது ...) என் பார்வையில் தோன்றும் ஒரு காரணம், அது படைப்பாளிக்கு கூடுதலான நிறைவை தரும் என்பது. ஒரு நெரிசலான சாலையில் லவகமாக பேருந்தை ஓட்டுபவனுக்கும் புறவழிசாலையில் ஒட்டுபவனுக்கும் உள்ள வேறுபாடு போல். நீ சொல்ல நினைத்ததையே, நான் இன்னும் குறைவான சாத்தியங்களுக்குள் சொல்லிவிட்டேன் என்ற ஒரு edge. இது தான் பெரும்பான்மையான தமிழாசிரியர்களை மரபு சார்ந்தே எழுத தூண்டுகிறது என்று நினைக்கிறேன். அதே போல் இலக்கணம் அறிந்த வாசகனுக்கும் ஒரு பிரமிப்பு. "இத்தன fielder நிக்க வெச்சும் 4 அடிச்சிட்டான்யா!!" என்பது போன்று. இந்த பிரமிப்புக்கு ஈடு செய்வதற்காகத்தான் மரபு சாரா கவிதை எழுதுவோர் ஒரு புன்முறுவலையோ, இமை உயர்தலையோ தரக்கூடிய புத்திசாலிதனமான வரிகளை தங்கள் கவிதையில் வைத்துவிடுகிறார்கள். பரவலான மக்களால் ஏற்று கொள்ள பட வேண்டிய மரபு சாரா கவிதைக்கு இந்த 'புத்திசாலித்தனமான வரியே' ஒரு இலக்கணம் ஆகி விட்டது.

நான் எழுதிய அந்த 'குறள் வெண்பா' சொற்றொடர்:

தளை:
"எப்படிச் சொன்னாலும் எங்கேனும் தட்டு
வதுதட்ட வில்லை இதில்"

No comments: